புள்ளும் சிலம்பின காண் (திருப்பாவை 6) - TPV6
இது ஒரு மீள்பதிவு, அதே சமயம், பாசுர விசேஷத்தையும் சில படங்களையும் புதிதாகச் சேர்த்திருக்கிறேன்.
*******************************************
இது திருப்பாவையின் 6-வது பாசுரம்.புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்*
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ*
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு*
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி*
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை*
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்*
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்*
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்
பொருளுரை:
இவ்வழகிய காலைப்பொழுதில், பறவைகள் எழுப்பும் இனிய சப்தமும், கருடனுக்குத் தலைவனான நம்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலில் வெண்சங்குகள் ஊதுவதால் எழும் இனிய பேரொலியும் உன் செவியில் விழவில்லையா ? அனுபவம் குறைந்த பெண்ணே, விரைவாக உறக்கம் கலைத்து எழுந்திரு !
பூதகி என்ற கொடிய அரக்கியின் முலையில் நச்சுப் பாலை உண்டு அவளை மாய்த்தவனும், வண்டிச் சக்கர உருவெடுத்து வந்த சகடாசுரன் என்ற மாய அரக்கனை உதைத்து அழிக்க தன் திருவடியை உயர்த்தியவனும், திருப்பாற்கடலில் நாகப் பஞ்சணையில் யோக நித்திரையில் ஆழ்ந்திருப்பவனும், ஏழு உலகங்களிலும் உள்ள அசையும், அசையா, உயிருள்ள மற்றும் ஜடப் பொருள்களில் ஆதிமூலமாக உறைந்திருப்பவனும், அவதாரங்களுக்கு காரணனும் ஆன அப்பரந்தாமனை
பெரும்பக்திமான்களான முனிவர்களும் யோகிகளும் தங்கள் சிந்தையில் நிறுத்தி செய்த தியானத்தை மெல்லக் கலைத்து, சிறிதும் பதட்டமின்றி அரி நாமத்தை தொடர்ந்து ஓதுவதால் உண்டாகும் பேரோசை நம் உள்ளம் புகுந்து நம்மைக் குளிர (பேருவகை கொள்ள) வைக்கிறது ! பாவை நோன்பிருந்து, அம்மாயக் கண்ணனை வணங்கி வழிபட வாராய் !
பாசுர விசேஷம்:
ஆழ்வார் திருப்பள்ளியெழுச்சியில் முதல் பாசுரமாக, தனது தந்தையும் ஆச்சார்யனுமான பெரியாழ்வாரை ஆண்டாள் துயிலெழுப்புவதாக (ஐதீகம்) அமைந்த பாடலாக இருப்பதாலோ என்னவோ, அற்புதமான நயமுடனும், சுவையுடனும் இப்பாசுரம் விளங்குகிறது! பின்னர் விளக்கம் வருகிறது.
ரம்யமான அதிகாலைப் பொழுதில் பெருமாள் கோயில் கோபுர அழகும், மேலே பறக்கின்ற பறவைகள் சப்தமும், சங்கொலியும், அடியவர் ஹரிநாம சங்கீர்த்தனம் செய்தபடி கோயிலுக்கு விரைவதும், பாற்கடலில் பள்ளி கொண்ட பரம்பொருள் வடிவும் என்று ஒரு அழகான காட்சி மனக்கண்முன் விரிகிறதல்லவா?
பெருமானின் வெண்சங்கு 'பேரரவம்' செய்தாலும், அது செவிக்கு இனிமையான சப்தம் தான். சக்கர வடிவில் அசுரன் வந்ததால் அது "கள்ளச்சகடம்" ஆயிற்று! 'கள்ளச் சகடம், கலக்கழிய, காலோச்சி' என்று அப்பாசுரவரியில் எதுகையில் ஒலிக்கும் 3 அழகான வார்த்தைப் பிரயோகங்களை கவனியுங்கள்!
பாற்கடல் ஆதிசேஷன் வெள்ளத்து அரவாம். அங்கு வித்தான பரம்பொருள் பள்ளி கொண்டிருப்பதை ரசமாக "துயிலமர்ந்து" என்கிறார் கோதை நாச்சியார். இங்கு "அமர்ந்து" என்பதற்கு ரட்சிப்பது என்று பொருள் கொள்ள வேண்டும்! அதெப்படி உறக்கத்தில் இருந்தவாறு அடியவரைக் காப்பது? யோக நித்திரையில் இருக்கும் அம்மாயனுக்கு அது சாத்தியம், அவ்வளவு தான்!அடியவரான முனிவர்களும் யோகிகளும், ஹரி மந்திரத்தை ஒரு தினசரி கடனாக, வாய் வார்த்தையாக உச்சரிக்கவில்லை, பரமனை "உள்ளத்துக் கொண்டு" ஆத்மார்த்தமாக அவன் பேர் பாடுகிறார்கள்! "மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்" என்பது சிறிய அளவில் ஆரம்பித்து பின்னர் பெரும் கோஷமாகும் crescendo-வை குறிக்கிறது! அப்பேரரவம் கேட்ட மாத்திரத்தில் எல்லா சங்கடங்களும் மறந்து போய், மனதில் மந்தகாசமான அமைதி ஏற்படுகிறது! (உள்ளம் குளிர்ந்தேலோர்) இங்கு பேரரவம் அமைதியைத் தருகிறது (oxymoron)
"மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்" என்பதற்கு இன்னொரு ரசமான விளக்கமிருக்கிறது! முனிவர்கள் யோகிகளின் உள்ளத்தில் பரமன் உறைந்திருப்பதால் ("உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்"), அவர்கள் தங்கள் தியானத்தைக் கலைக்கையில், பரமனின் யோக நித்திரை கலைந்து விடாத வண்ணம் கவனமாக "மெள்ள" எழுகின்றனர்!
பெரியாழ்வார் திருப்பள்ளியெழுச்சி:ஆண்டாள் பெரியாழ்வாரை "பிள்ளாய்" என்று அழைப்பது சரியா? அறியாத்தனமாக, பரந்தாமனே சர்வலோக ரட்சகன் என்பதை சற்று மறந்து, பட்டர்பிரான் பரமனுக்கே மங்களாசாசனம் (திருப்பல்லாண்டு மூலம்) செய்து வாழ்த்தி விட்டார்! பக்தியும் அன்பும் மிகுந்து, ஞானத்தை மறைத்து அவ்வகை "அஞ்ஞானம்" உண்டாவதையே, "ஞான விபாக காரியமான அஞ்ஞானத்தாலே வருமவையெல்லாம் ..." என்று ஸ்ரீவச்சன பூஷணம் சுட்டுகிறது.
புள்ளரையன் கருடாழ்வாரைக் குறிக்கிறது. பெரியாழ்வார் கருட அம்சமாக அவனியில் அவதரித்தவர். கிருஷ்ணலீலாவில் பெரியாழ்வாருக்கு மிகவும் பிடித்தமான பூதகி வதத்தை ஆண்டாள் "பேய்முலை நஞ்சுண்டு" என்று சுட்டுவதன் வாயிலாக, இப்பாசுரம் பெரியாழ்வாரை துயிலெழுப்புவதாகச் சொல்வது பொருத்தமானதே.
"வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை* உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்" என்று நாச்சியார் பாடும்போது, விஷ்ணுவை சதாசர்வ காலமும் சிந்தையில் நிறுத்திய விஷ்ணுசித்தரான பெரியாழ்வாரைத் தான் குறிப்பில் உணர்த்துகிறார்!
பாசுர உள்ளுரை/குறிப்புகள்:
1. பகவத் விஷயத்தில் புதிதாக ஈடுபாடு கொண்ட சிஷ்யனுக்கு அவனது குரு உபதேசம் செய்கின்ற நோக்கிலே இப்பாசுரம் அமைந்திருப்பதாக பெரியோர் உள்ளுரை கூறுவர்.
2. இப்பாசுரம் தொடங்கி அடுத்த பத்து பாசுரங்கள் (மொத்தம் 10), முதலில் விழித்தெழுந்தவர் இன்னும் உறக்கத்தில் இருப்பவரை எழுப்பும் நோக்கில் பாடப்பட்டவை. இவை பத்து ஆழ்வார்களைக் (ஆண்டாள், மதுரகவியார் தவிர்த்து) குறிப்பதாக ஓர் உள்ளர்த்தமும் உண்டு ! குறிப்பாக இப்பாசுரம் பெரியாழ்வாரை துயிலெழுப்புகிறது.
3. முதலில் துயில் கலைந்து எழுந்த மாந்தர், பகவான் மேல் பக்தி கொண்ட இன்ன பிறரையும் (அடியார்கள்) எழுப்பி, கண்ணனை தரிசித்து வணங்கி போற்றிப் பாடி ஆனந்தம் அடைய, தங்களுடன் கூட்டிச் செல்வதாக அமைந்திருப்பது, பகவத் விஷயத்தை ததீயரோடு கூட்டாக அனுபவிக்க வேண்டிய தத்துவத்தை வலியுறுத்துகிறது. இதை, முனிவர்களும் (பகவத் குணானுபவம் கொண்டு பரம்பொருளை உணர்ந்தவர்கள்) யோகிகளும் (பகவத் கைங்கர்யம் செய்யும் அடியார்கள்) ஒன்றாகச் சேர்ந்து சென்று அரி நாமத்தை ஓதுவதாகப் பாடப்பட்டதிலிருந்து அறிந்து கொள்ளலாம் அல்லவா ?4. துயிலெழுப்பும் முதல் சப்தம் பட்சி (கருடன்)யிடமிருந்து வெளிப்படுவதாக பாடியிருப்பது, பகவானை அடையும் வழியை உபதேசிக்கும் ஆச்சார்யனை முன்னிறுத்துவதாக ஓர் உள்ளர்த்தமும் உண்டு.
5. புள்ளரையன் கோயில் அஷ்டாக்ஷரத்தையும், அங்குள்ள சங்கு பிரணவத்தையும் குறிப்பதாகவும் உள்ளர்த்தம் உண்டு.
6. இப்பாசுரத்தை தத்துவார்த்தமாக நோக்கும் பெரியோர், அடியாரின் சத்வ குணம் 'வெள்ளை விளிசங்காகவும்', அகங்காரமும் (கர்வம்) மமகாரமும் (உலகப்பற்று) 'பேய் முலையாகவும்', அவற்றால் விளையும் பாவங்கள் 'நஞ்சாகவும்', புலன்கள் நாடும் சிற்றின்பங்களுக்கு வேண்டி அலை பாயும் உள்ளத்து உணர்வுகள் 'கள்ளச் சகடமாகவும்', சம்சார பந்தம் 'வெள்ளத்தரவாகவும்' உருவகப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறுவர்.7. ஆகவே, நற்குணம் கொண்ட அடியார்கள் மற்றும் ஆச்சார்யனின் துணையோடு, அரி நாமத்தை விடாமல் ஓதுவதன் மூலம், ஆகாதவற்றை விலக்கும் வைராக்கியம் பெற்று (கலக்கழியக் காலோச்சி !) பரமனை பற்ற முடியும்.
8. இப்பாசுரத்தில் பஞ்சமூர்த்திகளும் பாடப்பட்டுள்ளனர்.
"வித்தினை" எனும்போது பரம்பொருளான வைகுண்டநாதனையும்,
"வெள்ளத்தரவில் துயிலமர்ந்த" எனும்போது பாற்கடல் வியூஹ மூர்த்தியையும்,
"சகடம் கலக்கழியக் காலோச்சி" எனும்போது விபவ அவதார கண்ணனையும்,
"புள்ளரையன் கோயில்" எனும்போது அர்ச்சவதார ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமானையும்,
"உள்ளத்துக் கொண்டு" எனும்போதுஅந்தர்யாமியான பரமனையும்
கோதை நாச்சியார் போற்றிப் பாடியிருப்பதாக பெரியோர் உள்ளுரை கூறுவர்.
புள்ளரையன் கோயில் - கோயில்களில் நாம் வணங்கும் அர்ச்சாவதார சிலை ரூபத்தில் தான் பரமன் முழுமையாக எழுந்தருளியிருக்கிறான்! அதனால் தான் ஆலய வழிபாடு சிறப்பு பெறுகிறது. ஆக, ஆயர்ப்பாடியில் திருமாலின் கோயில் இருந்திருக்கிறது. அது போலவே, ராமரும் சீதையும் சென்று வழிபாடு செய்த கோயில் பற்றி பழங்குறிப்புகள் உள்ளன.
9. புள் என்றால் பறவை. திருப்புள் என்றால் உயர்ந்த பறவை, ராமாயணத்தில் வரும் ஜடாயுவைப் போல! ஜடாயுவுக்கு மோட்சம் கிடைத்த திருப்புட்குழி என்ற வைணவ திவ்யதேசமாக அறியப்படுகிறது. இத்தலம் காஞ்சிபுரத்திலிருந்து வேலூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது.
என்றென்றும் அன்புடன்
பாலா
*** 273 ***
28 மறுமொழிகள்:
Test comment !
மிக விரிந்த பொருளை மிகச் சுருக்கமாகச் சொல்லிச் சென்றுவிட்டீர்கள் பாலா. நன்றாக இருக்கிறது.
பாலா, விளக்கங்கள் அருமை!
அதுவும் "கலக்கழியக் காலோச்சி" மிக அருமை!
//பகவத் விஷயத்தில் புதிதாக ஈடுபாடு கொண்ட சிஷ்யனுக்கு அவனது குரு உபதேசம் செய்கின்ற நோக்கிலே இப்பாசுரம் அமைந்திருப்பதாக//
இப்படிச் சொல்லிவிட்டு
//இப்பாசுரம் பெரியாழ்வாரை துயிலெழுப்புகிறது// என்று குறிப்பிடுவது சற்றே நெருடல்!
மேல் விளக்கம் தேவை!
நன்றாக எழுதியிருக்கிறாய் பாலாஜி
கண்ணபிரான்,
வரவுக்கு நன்றி.
நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள இரண்டும் இருவேறு பெருந்தகைகளால் சொல்லப்பட்டதால் இருக்குமோ ???
Jokes apart, நீங்கள் கேட்ட பின் எனக்கும் சற்று குழப்பமாக உள்ளது. தெரிந்தவரிடம் கேட்டு பின் விவரம் தருகிறேன்
சங்கர், குமரன்,
நன்றி.
Good post. Thanks...
அடியேனுக்குப் புரிந்த வரை சொல்கிறேன்.
இந்தப் பாடலில் பிள்ளாய் எழுந்திராய் என்றதால் பகவத் விஷயத்தில் புதிதாக ஈடுபாடு கொண்ட ஒரு சீடனுக்கு குரு சொல்லும் உபதேசம் என்று ஒரு பொருள் சொல்லியிருப்பார்கள்.
பலவிதமாகப் பொருள் சொல்லும் போது இது ஒரு முறை. இன்னொரு முறையில் அறிவு மனத்திற்குச் சொல்லும் அறிவுரை என்றும் சொல்வதுண்டு அல்லவா? இரண்டையும் ஒரே நேரத்தில் படித்துக் குழப்பம் கொள்ளலாமா?
இன்னொரு விதமாகப் பொருள் சொல்வது தான் தோழியரை எழுப்பும் இப்பாடல்கள் ஆழ்வார்களை எழுப்புவது என்று சொல்வது. அதில் இந்தப் பாசுரம் பெரியாழ்வாரை எழுப்புவது என்று சொன்னதற்குக் காரணம் தொடக்கத்தில் இருக்கும் 'புள்ளரையன் கோவில்' என்ற சொற்றொடர். புள்ளரையன் என்று ஒரே சொல்லாகக் கொண்டு அது பறவைகளின் அரசனான கருடனைக் குறிப்பதாகவும் சொல்வதுண்டு. அப்படி இன்றி புள் என்பதை மட்டும் கருடன் என்ற பொருளில் கொண்டு புள் அரையன் என்பது கருடனின் சுவாமியான நம் சுவாமி என்று பொருள் கொள்வதும் உண்டு. அந்தப் பொருள் வரும் போது கருடனின் அவதாரமான பெரியாழ்வாரைப் பார்த்து 'உம்முடைய தலைவனின் கோவிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்கவில்லையோ' என்று சொல்லி எழுப்புவதாகப் பொருள் கொள்கிறார்கள்.
In a lighter sense, ஒருவேளை பெரியாழ்வார் கோதையை அடிக்கடி 'என்னைப் பெத்த அம்மா' என்று அழைத்திருப்பாரோ? அதனால் கோதை தன் தந்தையாரை 'பிள்ளாய் எழுந்திராய்' என்கிறாளோ? :-))
குமரன்
புள்ளரையன் - பெரியாழ்வார் விளக்கம் ஏற்புடைத்தே! மிகவும் நன்றி!
பிள்ளாய் எழுந்திராய்
//பகவத் விஷயத்தில் புதிதாக ஈடுபாடு கொண்ட சிஷ்யனுக்கு அவனது குரு உபதேசம் செய்கின்ற நோக்கிலே//
அதனால் தான் புதிய சிஷ்யனைப் பிள்ளாய் என்று விளிக்கிறாள். பிள்ளைக்குக் கள்ளம் கபடு கிடையாது! உடனே கிரகித்துக் கொள்ளும்; மற்றவர்க்கும் பகிர்ந்து கொள்ளும்!
பெரும் ஆசாரியர்களையும் அவர்களின் கள்ளமில்லா வெள்ளை உள்ளம் கருதி பிள்ளாய் என்று அழைக்கும் வழக்கம் உண்டு!
பெரியவாசான் பிள்ளை, பிள்ளை லோகாச்சாரியார், நம்பிள்ளை, பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் என்று இப்படி இத்தனை "பிள்ளை" ஆசாரியர்கள்!
குமரன்,
அழகான விளக்கத்திற்கு நன்றி !
கண்ணபிரான்,
குமரனின் விளக்கத்தை ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி :)))
பாலா,
என் போன்ற தமிழ் காதலர்க்கு கரும்பு நீராய் உள்ளது தங்கள் பதிவு.
விளக்கவுரையை மொத்தப் பாடலுக்கும் எழுதுவதைவிட ஒவ்வொரு வரிக்கும் கீழே நடைமுறை தமிழில் விளக்கம் சொல்லி (பதவுரை) பின் மொத்தமாக விளக்கவுரை தந்தால் என் போன்ற எளியோருக்கு சொட்டு சொட்டாய் அனுபவிக்கும் சுகம் கிடைக்கும்.
தமிழ் கவிதைகள் பல மேலும் மேலும் விளக்குங்களேன்.
தமிழ் பால் தந்ததற்கு நன்றிகள்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே..
இந்த வருடத்தில் கிடைத்த உங்கள் நட்பு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. பரந்து விரிந்த இந்த உலகத்தில் நம்மை சேர்த்து வைத்த இந்த பிளாக்கருக்கு நன்றி.
இந்த புதிய வருடத்தில் ஆண்டவனிடன் நீங்கள் வேண்டும் யாவும் கிடைக்கப்பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் நீங்களும் உங்களும் குடும்பத்தினரும் எல்லா வித இன்பங்களும் கிடைக்கப் பெற்று வாழ வாழ்த்துக்கள். தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் மேலும் மேன்மை அடைந்து சிறக்க வாழ்த்துக்கள்
Sir,
came to ur blog thro' Desikan/KRS. Enjoyed all ur pathivugal.
Thiruppavai-kku trans-literation in English varikku-varriku Seithirukindrigala? pl inform me.
Daily pasura natrpani thodara vizhyum- anban sundaram.
TEST ...
அருமையான பதிவு பாலா.
இவை பதினோரு ஆழ்வார்களைக் (ஆண்டாள் தவிர்த்து) குறிப்பதாக ஓர் உள்ளர்த்தமும் உண்டு ! குறிப்பாக இப்பாசுரம் பெரியாழ்வாரை துயிலெழுப்புகிறது
புதிய கோணம். தெரியபடுத்தியமைக்கு நன்றி.
துயிலெழுப்பும் முதல் சப்தம் பட்சி (கருடன்)யிடமிருந்து வெளிப்படுவதாக பாடியிருப்பது, பகவானை அடையும் வழியை உபதேசிக்கும் ஆச்சார்யனை முன்னிறுத்துவதாக ஓர் உள்ளர்த்தமும் உண்டு.
இந்த கருத்தும் அருமை.
தினம் தமிழ் பருக கிடைப்பது அருமை.
அண்ணே! பழைய பதிவை திருப்பி எடுத்து மீள் பதிக்காம, தேதி மாத்தி மீள் பதிச்சீங்களோ?
அப்ப ஏதோ கேள்வி கேட்டிருக்கேன் போல பெரியாழ்வார் பத்தி! பதில் எங்கே? எங்கே? எங்கே?
//திருப்பாவை முப்பதை பூர்த்தி செய்யலாம் என்று உத்தேசம் இருக்கிறது//
பந்தல்-ல தான் பூர்த்தியாகுதே!
பந்தலுக்கு வந்து திருக்கண் சார்த்த மாட்டீயளோ? :)
//அப்ப ஏதோ கேள்வி கேட்டிருக்கேன் போல பெரியாழ்வார் பத்தி! பதில் எங்கே? எங்கே? எங்கே?
//
உங்கள் ஐயம் நியாயமானது தான், இரு வேறு உரைகளிலிருந்து கையாளப்பட்டதால் தான் இந்த குழப்பம் !!! மேலும், குமரன் சொன்னது போல், பெரியாழ்வாரை கருட (புள்) அவதாரமாகக் கருதுவதால், அவரைத் துயிலெழுப்புவதாக எடுத்துக் கொள்ளலாம் தான். நீங்களும் "புள்ளரையன் - பெரியாழ்வார் விளக்கம் ஏற்புடைத்தே! மிகவும் நன்றி!' என்று கூறிவிட்டு 2 வருடங்கள் கழித்து, "எங்கே? எங்கே?" என்று கதறினால் எப்படி ? :)
//
பந்தல்-ல தான் பூர்த்தியாகுதே!
பந்தலுக்கு வந்து திருக்கண் சார்த்த மாட்டீயளோ? :)
//
உண்மையை சொல்லி விடட்டுமா ? ஆன்மீகம் சார் பதிவுகளுக்கு (ஜனரஞ்சகம் என்ற பெயரில்) "சூடான இடுகைகள்" டைப் தலைப்புகளும், மெட்ராஸ் பாஷை நடையும் எனக்கு அவ்வளவு ஏற்புடையதல்ல! நன்றாக கவனிக்கவும், இவ்விஷயத்தில் சரி/தவறு என்று எதுவும் நான் சொல்ல வரவில்லை!
(இப்போது) பந்தலில் என்னவோ இடறுகிறது, அவ்வளவு தான்... கேட்டீர்கள், சொல்லி விட்டேன், மன்னிக்கவும்...
வாம்மா 'மின்னல்', வாசிப்புக்கும், நற்சொற்களுக்கும் நன்றி.
எ.அ.பாலா
நல்ல விளக்கம் பாலா,
மற்றொரு கோணத்தில் பார்த்தால்
புள் - வேதம். ஆகவே வேதங்கள் கோஷிக்கின்றன.
புள்ளரையன் - வேதங்களுக்கெல்லாம் தலைவன் என்று வருகிறது.
இது சரியா?
இளைய பல்லவன்,
நன்றி.
//மற்றொரு கோணத்தில் பார்த்தால்
புள் - வேதம். ஆகவே வேதங்கள் கோஷிக்கின்றன.
புள்ளரையன் - வேதங்களுக்கெல்லாம் தலைவன் என்று வருகிறது.
இது சரியா?
//
இதுவும் ஏற்கத்தக்கதே, புள் என்றால் பட்சி (கருடன்) என்று கொள்ளும்போது, புள்ளரையன் என்பதற்கு பட்சிகளின் அரசன் கருடன் என்றும், கருடனின் அரசன் திருமால் என்றும் இரு அர்த்தங்கள் வரும். புள் என்பதை வேதம் எனும்போது, வேதங்களின் தலைவனான பெருமாளைக் குறிக்கிறது !
கண்ணபிரான்,
வாசித்தறிந்த சிலவற்றை பகிர்ந்து கொண்டுள்ளேன்!
//
அப்ப ஏதோ கேள்வி கேட்டிருக்கேன் போல பெரியாழ்வார் பத்தி! பதில் எங்கே? எங்கே? எங்கே?
//
6வது பாசுரம் (புள்ளும் சிலம்பின காண்) ஆண்டாளின் தந்தையும் அவரது ஆச்சார்யனுமான பெரியாழ்வாரை துயிலெழுப்புவதாக பெரியோர் கூறுவர். இதற்குப் பல காரணங்கள்:
1. காலையின் முதல் சப்தம் பட்சி (கருடன்)யிடமிருந்து வெளிப்படுவதாக ("புள்ளும் சிலம்பின காண்" என்று இது பாசுரத்தின் முதலடியில் ஆண்டாளால் வைக்கப்பட்டது! ) நாச்சியார் பாடியிருப்பது ஆச்சார்யனை 'முன்னிறுத்துவதாக'க் கொள்ள வேண்டும். ஆண்டாளின் ஆச்சார்யன் அவரது தந்தையான பெரியாழ்வார் தானே!
2. பெரியாழ்வரை கருடாழ்வார் அவதாரமாகக் (புள்ளரையன் = புள் + அரையன் = பட்சிகளின் அரசன்) கூறும் ஐதீகம் உண்டு.
3. "உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்" என்பதும் விஷ்ணுவை சதாசர்வ காலமும் நினைத்த வண்ணம் இருந்த "விஷ்ணுசித்தராகிய" பெரியாழ்வாரைக் குறிப்பதாகக் கொள்ளலாம்
4. 'வெள்ளை விளிசங்கு' என்ற பிரயோகம், பெரியாழ்வாரிடமிருந்து கடன் வாங்கிய ஒன்று. அது போலவே, "பேய்முலை நஞ்சுண்டு" என்று பெரியாழ்வாருக்குப் பிடித்த கிருஷ்ண லீலையை ஆண்டாள் பாடுவதன் மூலமும் பெரியாழ்வாரை துயிலெழுப்புவதாகக் கொள்ளலாம்.
எ.அ.பாலா
//நீங்களும் "புள்ளரையன் - பெரியாழ்வார் விளக்கம் ஏற்புடைத்தே! மிகவும் நன்றி!' என்று கூறிவிட்டு 2 வருடங்கள் கழித்து, "எங்கே? எங்கே?" என்று கதறினால் எப்படி ? :)//
நல்லாக் கவனியுங்கள்!
புள்ளரையன் = பெரியாழ்வார் விளக்கம் ஏற்புடைத்து-ன்னு தான் சொன்னேன்!
ஆனால் //பகவத் விஷயத்தில் புதிதாக ஈடுபாடு கொண்ட சிஷ்யனுக்கு அவனது குரு உபதேசம் செய்கின்ற நோக்கிலே இப்பாசுரம் அமைந்திருப்பதாக// - இதுக்குத் தான் நீங்க இன்னும் பதில் இப்பவும் சொல்லலை! :)
பகவத் விஷயத்தில் புதிதாக ஈடுபாடு கொண்ட சிஷ்யன் = பெரியாழ்வாரா?
(வந்து வழி வழி ஆட் செய்கின்றோம்-ன்னு பாடியவர் தானே? :)
அவருக்கு உபதேசம் செய்கின்ற நோக்கிலே இப்பாசுரம் அமைந்திருப்பதாகச் சொல்லி இருக்கீர்களே! அதுக்குத் தான் விளக்கம் கேட்டேன் அண்ணாச்சி! :)
//ஆன்மீகம் சார் பதிவுகளுக்கு (ஜனரஞ்சகம் என்ற பெயரில்) "சூடான இடுகைகள்" டைப் தலைப்புகளும், மெட்ராஸ் பாஷை நடையும் எனக்கு அவ்வளவு ஏற்புடையதல்ல!//
ஹா ஹா ஹா!
ஆண்டாள் வைக்காத வட்டார பாஷை நடையா? (கண்ணாலம், கீசுகீசு, இன்னும் நெறைய இருக்கு! தனிப் பதிவாவே போடலாம்)
ஆண்டாள் செய்த போதும் பாலா போன்றவர்கள் இதையே தான் சொன்னார்கள்! :)
ஆனால் ஆண்டாள் அதற்கெல்லாம் அஞ்சவில்லை!
அவள் நோக்கம் சாராத அடியாரையும் சார வைத்து, கூடி இருந்து, குளிர்ந்தேலோ தான்!
அதனால் தான், தானே போய் ஒவ்வொரு வீடாக வலிந்து எழுப்புகிறாள்! அவரவர் பாஷையிலும் பேசுகிறாள்!
அவளின் இந்த உள்ளத்துக்குத் தான், கண்ணாலம் போன்ற மெட்ராஸ் பாஷைகளுக்கும் ஆச்சார்யர்கள் பின்னாளில் படிப்படியாய் வியாக்யானம் பண்ணி வைத்தார்கள்!
பாசுர வரிகளை விதம் விதமாகப் படிக்கிறோம், எழுதுகிறோம்! அதே சமயம் பாசுர ஆத்மாவையும் தரிசித்தால் இந்த "இடறல்" வராது!
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து ஏல்-ஓர் எம்பாவாய்!
அட நீங்க வரலீன்னா என்ன? கோதை வீடு வீடாப் போனா மாதிரி, கோதையின் தோழன் அடியேன் இங்கு வந்து போகிறேன்! அதில் தடையேதும் இல்லையே? :)))
கண்ணபிரான்,
//
நல்லாக் கவனியுங்கள்!
புள்ளரையன் = பெரியாழ்வார் விளக்கம் ஏற்புடைத்து-ன்னு தான் சொன்னேன்!
ஆனால் //பகவத் விஷயத்தில் புதிதாக ஈடுபாடு கொண்ட சிஷ்யனுக்கு அவனது குரு உபதேசம் செய்கின்ற நோக்கிலே இப்பாசுரம் அமைந்திருப்பதாக// - இதுக்குத் தான் நீங்க இன்னும் பதில் இப்பவும் சொல்லலை! :)
பகவத் விஷயத்தில் புதிதாக ஈடுபாடு கொண்ட சிஷ்யன் = பெரியாழ்வாரா?
(வந்து வழி வழி ஆட் செய்கின்றோம்-ன்னு பாடியவர் தானே? :)
அவருக்கு உபதேசம் செய்கின்ற நோக்கிலே இப்பாசுரம் அமைந்திருப்பதாகச் சொல்லி இருக்கீர்களே! அதுக்குத் தான் விளக்கம் கேட்டேன் அண்ணாச்சி! :)
//
ஒன்று புரிந்து கொள்ளுங்கள், ஒரு பாசுரத்திற்கு பல வியாக்கியானங்கள் உள்ளன. உள்ளுரையாகச் சொல்லும்போது, அது ஒரு சீடனுக்கு குரு உபதேசம். "பிள்ளாய் எழுந்திராய்!" கவனிக்கவும்.
அது போல, 6வது பாசுரத்திலிருந்து 15வது பாசுரம் நோக்கிச் செல்லும்போது, துயிலெழுப்பப்படும் அடியவரின் (பக்தி, ஞானம் சம்பந்தப்பட்ட) தகுதி உயர்ந்து கொண்டே போவதாகவும் ஒரு கருத்துண்டு!
இதே பாசுரத்தை பெரியாழ்வாரின் திருப்பள்ளியெழுச்சியாக பார்க்கும்போது, "பிள்ளாய் எழுந்திராய்" என்பது நெருடும் தான். அவர் ஆண்டாளின் ஆச்சார்யன்.
இங்கே நாச்சியார் தந்தையை பாசமாக விளிப்பதாக நினைக்க வேண்டும்! கிருஷ்ணானுபவத்தில் மூழ்கி பெரியாழ்வார் "பிள்ளாய்" ஆகி விடுகிறார், அஞ்ஞானத்தினால் அல்ல :)
"வந்து வழி வழி ஆட் செய்கின்றவரை" "புதிதாக ஈடுபாடு கொண்ட சிஷ்யன்" என்று சொல்ல அடியேன் துணிவேனா ? இப்படியெல்லாம் லாஜிக் பார்த்து என்னை மாட்டி விடக் கூடாது :)
எ.அ. பாலா
கண்ணபிரான்,
கண்ணபிரான்,
**************************
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//ஆன்மீகம் சார் பதிவுகளுக்கு (ஜனரஞ்சகம் என்ற பெயரில்) "சூடான இடுகைகள்" டைப் தலைப்புகளும், மெட்ராஸ் பாஷை நடையும் எனக்கு அவ்வளவு ஏற்புடையதல்ல!//
ஹா ஹா ஹா!
ஆண்டாள் வைக்காத வட்டார பாஷை நடையா? (கண்ணாலம், கீசுகீசு, இன்னும் நெறைய இருக்கு! தனிப் பதிவாவே போடலாம்)
ஆண்டாள் செய்த போதும் பாலா போன்றவர்கள் இதையே தான் சொன்னார்கள்! :)
ஆனால் ஆண்டாள் அதற்கெல்லாம் அஞ்சவில்லை!
அவள் நோக்கம் சாராத அடியாரையும் சார வைத்து, கூடி இருந்து, குளிர்ந்தேலோ தான்!
அதனால் தான், தானே போய் ஒவ்வொரு வீடாக வலிந்து எழுப்புகிறாள்! அவரவர் பாஷையிலும் பேசுகிறாள்!
அவளின் இந்த உள்ளத்துக்குத் தான், கண்ணாலம் போன்ற மெட்ராஸ் பாஷைகளுக்கும் ஆச்சார்யர்கள் பின்னாளில் படிப்படியாய் வியாக்யானம் பண்ணி வைத்தார்கள்!
பாசுர வரிகளை விதம் விதமாகப் படிக்கிறோம், எழுதுகிறோம்! அதே சமயம் பாசுர ஆத்மாவையும் தரிசித்தால் இந்த "இடறல்" வராது!
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து ஏல்-ஓர் எம்பாவாய்!
**************************************
பாலா போன்ற உன்மத்தர்கள் அன்றே இருந்துள்ளனர் போல் தெரிகிறது :) கவனிக்கவும், நான் "தவறு" என்று சொல்லவே இல்லை! உங்களை அஞ்சவும் சொல்லவில்லை!
ஆன்மீக ஆர்வத்திலும், விஷய ஞானத்திலும் நீங்கள் என்னிலும் சிறந்தவர் என்பதில் எனக்கு கடுகளவு கூட ஐயம் கிடையாது !!!
அதே நேரத்தில், இடறியது என்னவோ உண்மை! "ஆப்பேலோ ரெம்பாவாய்" ஆன்மீகம் வளர்க்கும் என்பதை ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டேன்!
'கீசுகீசு' என்பது வேறு, ஆன்மீகத்தை கேலி தொனிக்கும் வண்ணம் எழுதுவது என்பது வேறு, என்னளவில், அதனால் ஆன்மீக ஈடுபாடு ஏற்படாது...
சந்தடி சாக்கில், உங்களை கோதை நாச்சியாராக வரிந்து கொண்டு(ஆண்டாள் 'செய்த போதும்' பாலா போன்றவர்கள் இதையே தான் சொன்னார்கள்!) விட்ட சூழ்ச்சியை கண்டனம் செய்கிறேன் ;-)
//
அட நீங்க வரலீன்னா என்ன? கோதை வீடு வீடாப் போனா மாதிரி, கோதையின் தோழன் அடியேன் இங்கு வந்து போகிறேன்! அதில் தடையேதும் இல்லையே? :)))
//
ஒரு தடையும் இல்லை. நானும் பந்தலில் எவ்வளவோ சேவித்திருக்கிறேனே :)
எ.அ.பாலா
Republished this thiruppavai posting after adding more information and pictures
Post a Comment